Search This Blog

Tuesday, September 29, 2026

Avvaiyar statue in Chennai ! அவ்வை-யார் ? - ஔவை என்றால் மனதில் தோன்றுவது !

 

சென்னையில் மக்கள் குவியுமிடம் மெரினா கடற்கரை .. .. .. பல சிலைகள் உள்ளன.  இராணி மேரிக்கல்லூரி எதிரில்   இருக்கும் ஒவ்வையார் சிலையையும் கவனித்து இருப்பீர் !! 

அவ்வை-யார் ?    -  ஔவை என்றால் மனதில் தோன்றுவது !  பாடப் புத்தகங்களில் பார்த்த 'கையில் கோலூன்றி நெற்றியில் நீரு அணிந்து கம்பீரக் குரலில் பாடும் அறிவான ஒரு மூதாட்டியின் உருவம்' !!  ‘பழம் நீ அப்பா ஞானப் பழம் நீ அப்பா’ என்று சினிமாவில் பாடிய உருவம் !!  சங்க கால ஔவை மூதாட்டி அல்ல எனவும் படித்து உள்ளேன்.  அழகும் இளமையும் அறிவும் வாய்த்த இளம் பெண். மை தீட்டிய விழிகளும், அழகான ஆபரணங்கள் அணிந்த இடையும், பிறை போன்ற நெற்றியும் பெற்றிருந்த மடவரவள். அவர் ஒரு இளம் விறலி. விறலி என்றால் பாடலின் பொருளை உணரும் வகையில் மெய்ப்பாடு தோன்ற ஆடிக் காட்டுபவள் என்று பொருளாம். 

ஒளவையைக் குறித்து பல கதைகளை குழந்தைப் பருவம் முதலே கேட்டும் படித்தும் இருக்கிறோம். அதில் ‘சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா பாட்டி’ எனக் கேட்டு முருகன் சோதித்தக் கதையும், அதியமான் ஔவைக்குக் கொடுத்த அதிசய நெல்லிக்கனி கதையும் அடிக்கடி கேள்விப் பட்டிருப்பவை.

             சங்ககால ஔவையார்,  தொண்டை நாட்டு மன்னன் அதியமானிடம் நெல்லிக்கனி பெற்றவர். அதியமானுக்கு நல்ல நண்பர். அதியமானைப் போற்றி நிறைய பாடல்களைப் பாடியுள்ளார்.    நெடுமான் அஞ்சி என்பவன், அதிகர் குலத்திலே பிறந்தவனாதலின் அவனுடைய முழுப் பெயர் அதிகமான் நெடுமான் அஞ்சி என்று வழங்கியது .  தகடூர் என்பது இன்று சேலம் மாவட்டத்தில் தருமபுரி என்ற பெயரோடு நிலவுகிறது. அதற்குத் தெற்கே நான்கு மைல் தூரத்தில் இன்றும் அதிகமான் கோட்டை என்ற இடம் இருக்கிறது. இவை யாவும் சேர்ந்த பெரிய பரப்புள்ள இடமே பழங்காலத்தில் அதியமான் இருந்து அரசாட்சி நடத்திய தகடூராக விளங்கியது. எழு பெருவள்ளல்களில் ஒருவனும் ஒளவைக்குச் சாவா மூவா நிலைதரும் நெல்லிக்கனியை வழங்கியவனுமாகிய அதியமான் நெடுமான் அஞ்சியின் வரலாறு சுவையானது.       

அதிகமான் காட்டில் பல மலைகள் இருந்தன. குதிரை மலை என்பது ஒன்று. கஞ்ச மலை என்பது மற்றொன்று.  அந்த மலையில் மிகவும் அருமையான நெல்லி மரம் ஒன்று இருந்தது. மருத்துவத்தில் வல்ல அறிஞர்கள் அதைக் கண்டுபிடித்தார்கள். அது பல ஆண்டுகளுக்கு ஒரு முறையே காய்க்கும்; பூத்துப் பிஞ்சு விடும்; ஆனால் பிஞ்சுகளெல்லாம் உதிர்ந்துவிடும். அதன் கனியை உண்டால் நரை திரை மூப்பின்றிப் பல காலம் வாழலாம்.   அதிசய  நெல்லிக் கனியை உண்பவர் நீண்டநாள் சுகமாக வாழலாம் என்பதை அறிந்த அதியமான். அக்கனியை ஔவையாருக்குக் கொடுத்தான். 



 அதியமான் நெல்லிக்கனியை ஔவையாருக்குக் கொடுத்ததை சிறுபாணாற்றுப்படையில்

“........................... ....... மால் வரை

கமழ் பூஞ் சாரல் கவினிய நெல்லி

அமிழ்து விளை தீம் கனி ஔவைக்கு ஈந்த

உரவு சினம் கனலும் ஒளி திகழ் நெடுவேல்

அரவக் கடல் தானை அதிகனும் .............”

- (சிறுபாணாற்றுப்படை: 99 - 103)

நல்லூர் நத்தத்தனார் கூறியுள்ளார்.  அதியமான் நெடுமான் அஞ்சி தான் வாழ்வதைவிட ஔவையார் வாழ்ந்தால் தமிழ் வாழும் என நினைத்தான்.

Interesting !  ~ pic of Avvaiyar statue in Beach Road [opp to Queen Mary’s college taken this evening with the background  hi-mast light looking like a crown!] [actually the light post is a few yards away !]

Regards – S Sampathkumar

29.9.2026

No comments:

Post a Comment