Search This Blog

Friday, May 27, 2022

some excerpts from the speech of HOnble PM Shri Narendra Modiji at Chennai

சென்னையில் 26.5.2022 அன்று  வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய விழாவில் மாண்புமிகு இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள்  ஆற்றிய உரையின் சில சிறப்பு வரிகள்: ·         இது மிகவும் சிறப்பான பூமி. இந்த மாநிலத்தின் மக்கள், கலாச்சாரம், மொழி என அனைத்துமே மிகச் சிறப்பானவை. சீர்பெருமை நிறைந்த பாரதியார் அவர்கள்,

செந்தமிழ் நாடென்னும் போதினிலே,

இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே

என்று மிக அழகாகப் பாடியிருக்கிறார்.

·         காதுகேளாதோருக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் நாம் வென்ற 16 பதக்கங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் ஆறு பேர்களுக்கு ஒரு பங்கு இருந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? 

·         ஃப்ரான்ஸ் நாட்டின் கான்ஸ் (Cannes) நகரிலே நடைபெற்ற திரைப்பட விழாவில் இந்த மகத்துவம் வாய்ந்த தமிழ்நாட்டின் மைந்தரான எல். முருகன் அவர்கள், தமிழ்நாட்டுக்கே உரிய பாரம்பரியமான ஆடையில் அங்கே, சிவப்புக் கம்பளத்தின் மீது நடந்தார்.   இது உலகெங்கிலும் உள்ள தமிழர்களைப் பெருமிதம் கொள்ளச் செய்தது.

·         31,000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட திட்டங்கள் இங்கே ஒன்று, தொடங்கப்பட இருக்கின்றன அல்லது அவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட இருக்கின்றன.  சாலைக் கட்டுமானத்தின் மீது செலுத்தப்பட்டிருக்கும் கவனம் தெளிவாகப் புலப்படுகிறது. இது பொருளாதார வளர்ச்சியோடு நேரடியாக தொடர்புடையது.

·         5 இரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட இருப்பது எனக்குக் குறிப்பாக உவகையை அளிக்கிறது. எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு நவீனமயமாக்கலும், மேம்பாடும் செய்யப்படுகின்றன.  அதே நேரத்தில், இது உள்ளூர் கலை, கலாச்சாரம் ஆகியவற்றுக்கு ஏற்றதாகவும் இருக்கும்.

·         பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்திற்கு உட்பட்டு, வரலாற்று சிறப்புமிக்க சென்னையில் நவீன தொழில் நுட்பத்திலான வீட்டுவசதித் திட்டத்தின்படி வீடுகள் கிடைக்கப் பெறும் அனைவருக்கும் நான் என் வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

·         நண்பர்களே, நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையின் தரத்தை விடச் சிறப்பான ஒரு வாழ்க்கைத் தரத்தை உங்கள் குழந்தைகள் வாழ வேண்டும் என்று நீங்கள் அனைவரும் விரும்புவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்கள் குழந்தைகளுக்கு ஒரு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க நீங்கள் ஒவ்வொருவரும் விரும்புவீர்கள். இதற்கு முக்கியமான அடிப்படைத் தேவைகளில் ஒன்று தான் தலைசிறந்த உள்கட்டமைப்பு வசதிகள்.

·         ஒவ்வொரு இல்லத்திற்கும் குடிநீரைக் கொண்டு சேர்ப்பதை உறுதி செய்ய பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். இப்படி நாம் செய்யும் போது, பாரபட்சமோ, விடுபட்டுப் போவதற்கான சாத்தியக்கூறோ இருக்காது.

·         செம்மொழி தமிழாய்வு மையத்திற்கு புதிய வளாகம் ஒன்று, இந்த ஆண்டு ஜனவரி மாதம், சென்னையில் தொடங்கப்பட்டது.  இந்தப் புதிய வளாகத்திற்கு முழுக்க முழுக்க மத்திய அரசே நிதி வழங்குகிறது.  இங்கே விசாலமான ஒரு நூலகம், ஒரு மின்னணு நூலகம், கருத்தரங்குக் கூடங்கள், பல்லூடக அரங்கொன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.

·         இந்திய மொழிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கை அவற்றுக்குச் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது. தேசிய கல்விக் கொள்கை காரணமாக, தொழில்நுட்ப, மருத்துவப் படிப்புக்களை உள்ளூர் மொழிகளிலேயே கற்க முடியும்.

·         இலங்கை நெருக்கடியான சூழ்நிலையைக் கடந்து கொண்டிருக்கிறது.   நெருங்கிய நட்பு நாடு என்ற வகையிலும், அண்டை நாடு என்ற முறையிலும், இந்தியா இலங்கைக்கு அனைத்துவிதமான உதவிகளையும் அளித்து வருகிறது. யாழ்ப்பாணத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு நான் சென்றதை என்னால் மறக்க முடியாது.  யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதல் இந்தியப் பிரதமர் நான் தான். இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கு உதவும் வகையிலே இந்திய அரசாங்கம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.  இந்தத் திட்டங்கள் சுகாதாரம், போக்குவரத்து, வீட்டுவசதி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை உள்ளடக்கும்.

நண்பர்களே, சுதந்திரத் திருநாள் அமிர்தப் பெருவிழாவை நாம் இப்போது கொண்டாடி வருகிறோம்.  75 ஆண்டுகளுக்கு முன்பாக, ஒரு சுதந்திர நாடு என்ற வகையில் நாம் நமது பயணத்தைத் தொடங்கினோம்.  நமது நாட்டிற்காக நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் பல கனவுகளைக் கண்டார்கள். அவற்றை நிறைவேற்றுவது நமது கடமை என்பதோடு, நாமனைவரும் இந்த சந்தர்ப்பத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டு கனவை நனவாக்க முயற்சி மேற்கொள்வோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நாமனைவரும் இணைந்து இந்தியாவை வலுவானதாகவும், வளமானதாகவும் ஆக்குவோம்.

மீண்டும் ஒருமுறை, தொடங்கப்பட்டிருக்கும் வளர்ச்சிப் பணிகளுக்கான நல்வாழ்த்துக்கள்.

வணக்கம்.

மிக்க நன்றி. 

The original and full text  is available at : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1828592 

1 comment: